பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
வீரபாண்டி: கந்தசஷ்டி விழாவையொட்டி, நடந்த வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, கடந்த, 12ல் காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது.
நேற்று (நவம்., 14ல்) காலை, முருகன், மரமாக நின்ற சூரனை, இரண்டாக பிளந்து, சேவல் மற்றும் மயிலாக மாற்றி ஆட்கொண்ட சினம் தணிந்து, மயில் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, வள்ளி, தெய்வானையுடன், முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து, சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, வீதி உலா நடந்தது. பின், ஊஞ்சல் பாலி உற்சவத்துடன், கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. அதேபோல், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. பின், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் உற்சவருக்கு, கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், அம்மாபேட்டை சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைச்சாவடி முருகன், குமரகிரி தண்டாயுதபாணி, பேர்லேண்ட்ஸ் முருகன், ஜாகீர்அம்மாபாளையம், காவடி பழநியாண்டவர் ஆசிரமம், ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் ஆகிய கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.