கேரள பெண் பக்தர்கள் இருமுடி தாங்கி மண்டைக்காடு வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2012 11:02
குளச்சல்:மாசிமாதம் பிறந்ததை ஒட்டி 41 நாட்கள் விரதமிருந்து கேரளபக்தர்கள் இருமுடி சுமந்து வந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டு செல்கின்றனர்.பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிகொடைவிழா வரும் மார்ச் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவிற்கான கால் நாட்டுவிழா கடந்த ஏழாம் தேதி நடந்தது. மாசிமாதம் முழுவதும் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வருகை தருகின்றனர். மாசி மாதம் நேற்று முன்தினம் பிறந்தது. நேற்று மாசிமாதம் முதல் செவ்வாய்கிழமை என்பதால் நேற்று முன்தினம் இரவே கேரள பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன்கோயிலுக்கு வந்துவிட்டனர். நேற்று அதிகாலை கடலில் புனிதநீராடி அம்மனை வழிபட்டனர். இதில் அதிக அளவு பக்தர்கள் 41நாட்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் கேரள பெண் பக்தர்கள் கோயிலை சுற்றி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை முதலே “அம்மே சரணம் தேவிசரணம் மண்டைக்காட்டம்மே சரணம், சரணம்தா தேவி சரணம்தா தேவி பொன்னம்மே என்ற கோஷம் ஒலிக்க துவங்கியுள்ளது. இனி மாசி பெரும்கொடைவிழா நிறைவுபெறும் வரை இந்த சரண கோஷம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்.