கேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயிலில் நவ.30ல் மகாதேவாஷ்டமி விழா நடக்கிறது. இங்குள்ள ஐந்தடி உயர மூலவர் சிலை திரேதாயுகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வேறெங்கும் இல்லாத விதத்தில் சிவன் காலையில் தட்சிணாமூர்த்தியாகவும், மதியம் கிராதமூர்த்தி யாகவும், மாலையில் பார்வதியுடன் சாம்பசிவனாகவும் காட்சியளிக்கிறார். மலையாள மாதமான விருச்சிகத்தில் (கார்த்திகை) நடக்கும் 12 நாள் விழாவில் அஷ்டமியன்று விடிய விடிய வழிபாடு நடக்கும். அன்று உச்சிக்கால பூஜை முடிந்ததும் சுவாமி “ஆனக்கொட்டில்” எனப்படும் யானை கட்டும் இடத்தில் எழுந்தருள்வார். அருகிலுள்ள கோயில்களில் இருந்தும் உற்ஸவர்கள் வருவர். அனைத்து தெய்வங்களும் வைக்கத்தப்பனை பின்தொடர ஆனக்கொட்டிலில் காட்சியளிப்பர். அதன் பின் காணிக்கை செலுத்தும் வைபவத்தில், நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவர். இந்நாளில் வைக்கம் மட்டுமின்றி தமிழகத்திலும் சிவனுக்கு யாகபூஜை நடத்தி அன்னதானம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்றால் சுபிட்சம் நிலவும். சிவன் கோயில்கள் மற்றும் வைக்கத்தஷ்டமியன்று அன்னதானம் செய்யும் அமைப்புகளை அணுகி இயன்ற பொருளுதவி செய்து சிவனருள் பெறுங்கள்.