பதிவு செய்த நாள்
27
நவ
2018
12:11
பண்ருட்டி: பண்ருட்டி செல்வ விநாயகர் கோவிலில் நேற்று 2வது சோமவாரத்தையொட்டி, 108 வலம்புரி சங்காபிஷேகம் நேற்று நடந்தது. கார்த்திகை மாத 2வது சோமவாரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9:00 மணிக்கு சங்கல்பம், சங்குகள் பிரதிஷ்டை, ஆவாஹணம், கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி நடந்து பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. 12:10 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகமும், இரவு 7:30 மணிக்கு விசேஷ அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மேல் புனிதநீர் கலசங்கள், 108 சங்குகள் வைத்து உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. பின்னர், சுவாமிக்கு 108 சங்காபிேஷகம் ஆராதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவில்களில் சோமவார பூஜையையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு விநாயகர், சொக்கநாதர், மீனாட்சிஅம்மன், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஆலய உள்பிரகார உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.