திருக்கோவிலுார்: கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவில்‚ அட்ட வீரட்டானங்களில் ஒன்று. நாயன்மார்களின் முக்கியமானவரான மெய்ப்பொருள் நாயனார் அவதரித்து ஆட்சி புரிந்த ஊர். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் பிறந்த ஊர். பாட்டி ஊரான இங்கு பிறந்து ஐந்து வயதுவரை வளர்ந்து விளையாடிய மண். இத்தனை உண்மைகளையும் கல்வெட்டுக்களாக தாங்கியிருக்கும் கருவறை சுவற்றை கொண்ட வீரட்டானேஸ்வரர் கோவில் பெருமைகள் பற்றி அப்பரும்‚ சம்பந்தரும் பாடியுள்ளனர்.
மிகவும் பழமையான இக்கோவில் கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு திருப்பணி செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வரும் இக்கோவிலுக்கு நகரில் பல கடைகள் உள்ளது. நிலங்களும் ஏராளமான இருக்கிறது.பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் பக்தர்களின் வருகையும் அதிகம். எனவே உண்டியல் வருவாயும் திருப்திகரமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் கோவிலில் அடிப்படை வசதிகள்தான் கேள்விக்குறியாக உள்ளது. வசதிகள் இல்லை என்றாலும் கோவிலை முறையாக பராமரிப்பதிலும் சிக்கல். ஆகம விதிப்படி ஒரு கோவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷகம் செய்ய வேண்டும்.பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அதுபற்றியும் இந்துசமய அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. மூலஸ்தானத்தின் உள்பிரகாரம் தற்போது ஒழுகத்துவங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க பல கல்வெட்டுகளை தாங்கியிருக்கும் இப்பிரகாரத்தில் மழை பெய்தால் ஒழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கற்கலால் ஆன மேல்தளம் ஒழுகத்துவங்கியிருப்பதால் கோவிலில் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது.கோவில் விழாக்கள்‚ பூஜைகள் என அனைத்தையும் பக்தர்களே கவனித்துக் கொள்ளும் நிலையில்‚ சிப்பந்திகளுக்கான மாத சம்பளம் மட்டும் சொற்ப அளவில் வழங்கப்படுகிறது. மின் கட்டணம் செலுத்துவதுடன் இந்துசமய அறநிலையத்துறையின் பணி முடிந்து விடுகிறது.விழா நாட்களில் பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம்‚ உண்டியல் வசூல்‚ நில குத்தகை பணம்‚ திருமண விழாவிற்கான கட்டணம் என வசூலாகும் பணம் எல்லாம் என்ன செய்யப்படுகிறது என்பது அந்த சிவனுக்கே வெளிச்சம்.எது எப்படியாக இருந்தாலும்‚ கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடத்து விட்டதால்‚ கோவிலை உடனடியாக புதுபித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோலாக இருக்கிறது.