பதிவு செய்த நாள்
01
டிச
2018
01:12
அந்தியூர்: அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் கோவிலில், வீர காலபைரவருக்கு தேவாஷ்டமி பூஜை நேற்று (நவம்., 30ல்) நடந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில், பழமை வாய்ந்த செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள வீர காலபைரவருக்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், தேவாஷ்டமி பூஜை, நடக்கும். இந்த ஆண்டு, தேவாஷ்டமியை ஒட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல், தொடர்ந்து எட்டு நாட்களாக, அஷ்ட பைரவ யாக பூஜை, நடந்தது. நிறைவு நாளான நேற்று (நவம்., 30ல்), மூலவர், சம்ஹார பைரவராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு வரை நடந்த, சிறப்பு யாக பூஜையில், 1,008 மூலிகைகள் மற்றும் மிளகு வடை கொண்டு யாகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் சாம்பல் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர்.
தேவாஷ்டமியை ஒட்டி, தவிட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், சந்தியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.