பதிவு செய்த நாள்
17
டிச
2018
01:12
பெண்ணாடம்:மார்கழி மாத முதல் நாளையொட்டி, பெண்ணாடம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தன.குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவதும்; சிலர் குழுக்களாக இணைந்து பஜனை பாடல்களை வீதிகளில் பாடிச்செல்வதும் வழக்கம்.
அதன்படி, மார்கழி மாதம் முதல் நாளான நேற்று (டிசம்., 16ல்), பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேதநாராயண பெருமாள் சுவாமிக்கு நேற்று (டிசம்., 16ல்) காலை, 5:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம், காலை 6:15 மணியளவில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஏராளமானோர் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி கோவில் வளாகத்தை வலம் வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
இதேபோன்று, பிரளயகாலேஸ்வரர் கோவில் மற்றும் இறையூர் தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில்களில் அதிகாலை 4:00 மணியளவில் நடைதிறப்பு, 4:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு; காலை 5:00 மணியளவில் தீபாரதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.