பதிவு செய்த நாள்
17
டிச
2018
01:12
திருப்பூர்:மார்கழி மாதம் பிறந்ததையடுத்து, நேற்று (டிசம்., 16ல்) முதல், திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியது.
குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி யெழுச்சி, விஸ்வேஸ்வரர் சுவாமி கோவிலில் திருவெம்பாவை, கன்னிகா பரமேஸ்வரி அம்மன், வீரராகவ பெருமாள் கோவில்களில், திருப்பாவை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன; திரளான பக்தர்கள், வழிபாடு நடத்தினர்; அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.மார்கழி, 30ம் தேதி வரை, தினசரி, சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், மார்கழி பாராயண வழிபாடு நிகழ்ச்சியை நடத்துகிறது.
நாளை (டிசம்., 18ல்), வீரராகவப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்க, லட்டு தயாரிக்கப்பட்டது.பிரசித்த பெற்ற, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (டிசம்., 18ல்), நடக்கிறது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல், அதிகாலை, 4:30 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சொர்க்க வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். நாளை, ஏகாதசி துவங்கவுள்ள நிலையில், பக்தர்களுக்கு லட்டு தயாரிக்கும் பணி, நேற்று (டிசம்., 16ல்) நடந்தது.இதில், 75 சமையலர், 500க்கும் அதிகமான சேவகர்கள், மாவட்ட பெருமாள் பக்தர் குழு, திருமலை திருப்பதிக்கு ஸ்ரீ வாரி சேவைக்கு செல்லும் பக்தர் குழு மற்றும் பெண்கள் இணைந்து, லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு வழங்க, ஒரு லட்சத்துக்கு எட்டாயிரம் லட்டு தயாரிக்கப்பட்டது.