சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு
பதிவு செய்த நாள்
18
டிச 2018 01:12
சென்னை: சின்ன திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நடந்து வரும் மார்கழி விழாவில், பிரதான நாளான இன்று, பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.சென்னை, அம்பத்துார், லெனின் நகர், சின்ன திருப்பதியில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி, மார்கழி மாத விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.இதை ஒட்டி, தினமும் திருப்பாவை, ராமா, கோவிந்த நாமம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாராயணீயம் பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் ஆகியவை நடக்கின்றன. இந்த ஆண்டிற்கான புரட்டாசி மாத விழா, விமரிசையாக நடந்தது. அதைத்தொடர்ந்து, மார்கழி மாத விழா நடந்து வருகிறது.இதில், பிரதான விழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், மேல்கோட்டை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்கிறார்.ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற உள்ளது. துவாதசியான நாளை, சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.டிச., 25ம் தேதி, அய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு, காலை, நாகை சுந்தர் ராஜா பாகவதரின், பஜனை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடத்தப்படுகிறது. 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு சவுந்தர்யா குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஜன., 1ம் தேதி, மூலவருக்கு சிறப்பு அலங்கார தரிசனம் நடக்கிறது. ஜன.,5ம் தேதி, அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், 10 ஆயிரத்து எட்டு வடமாலை சாற்றப்பட உள்ளது.
|