கடன், நோய், குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியவில்லையா? ஏழரைச்சனி ஓட ஓட துரத்துகிறதா? கவலை வேண்டாம். திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு சண்முக சுவாமி கோயிலுக்கு வந்தால் பிரச்னை பறந்தோடும். பராந்தக சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலில், ’சண்முகர் சுவாமி’ என்ற பெயரில் முருகன் அருள்பாலிக்க உடன்தெய்வானையும் வள்ளியும் உள்ளனர். ஒருமுறை பிரம்மாவை பீடிக்க சனீஸ்வரர் காத்திருந்த நிலையில், இங்குள்ள முருகனை வழிபட்டு நன்மை பெற்றார். இதனடிப்படையில் சனிபரிகாரத் தலமாக இக்கோயில் திகழ்கிறது. தேவகிரிமலை அடிவாரத்திலுள்ள குளத்தில் நீராடி இங்குள்ள சுயம்பு சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் மற்றும் பால் அபிஷேகம் செய்ய ஏழரைச்சனி, அஷ்டமச்சனி விலகும். திருமணத்தடை, புத்திர தோஷம் அகலும். இங்குள்ள வேதகிரி மலையில் தான் ’காகம்’ தோன்றியதாக தலவரலாறு கூறுகிறது. இங்கு காகத்திற்கு சோறு வைத்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். புனித தலங்களான காசி, ராமேஸ்வரத்தை விட இங்கு வழிபட பலன் அதிகம். திருவண்ணாமலை – வேலூர் சாலையில் மல்லவாடியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் தேவனாம்பட்டு (காட்டுப்புத்தூர்) உள்ளது.