பதிவு செய்த நாள்
27
டிச
2018
11:12
குன்னுார்:குன்னுார் சிவசுப்ரமணியர் கோவிலில் பழனி பாதயாத்திரை குழுவினர் சார்பில், திருத்தேர் ஊர்வலம் நடந்தது.குன்னுார் வி.பி., தெரு பகுதியில் அமைந்துள்ள சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், 18வது ஆண்டு விளக்குபூஜை நேற்று முன்தினம் துவங்கியது. சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனையோடு பஜனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து பழனி பாதயாத்திரை பக்தர்கள், விஷாக பாதயாத்திரை குழுவினரின் பஜனை பாடல்களுடன், விளக்கு பூஜை ஊர்வலம் துவங்கியது. திருத்தேரில், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடிஎடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் விளக்குகளை ஏந்தி, முருகா கோஷத்துடன் மவுன்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட், வி.பி., தெரு வழியாக கோவிலை அடைந்தனர். சிவசுப்ரமணியருக்கு மகா தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விளக்குபூஜையில் பங்கேற்றபவர்களுக்கு விழா குழுவினர் சார்பில் விளக்கு மற்றும் தட்டு வழங்கப்பட்டது.வரும் 1ம் தேதியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குன்னுார் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.