இராமயண காலத்தில் அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தமை தொடர்பில் அமைக்கப்பட்ட கோயில். சீதைக்கென உள்ள ஒரே கோயில் இதுவாகும். கோயிலை ஒட்டி சலசலத்தோடும் சீதா அருவி என இயற்கையின் எழில் கொஞ்சுகிறது. இராமாயண கதையின் நாயகி, சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த இடம் அசோக வனம் என்று குறிப்பிடபட்டுள்ளது. அந்த அசோக வனம் இலங்கையில் உள்ள நுவரேலியா நகரிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியில் சீத்தா எலிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம் என்று பெயர் பெற்றுள்ளது. சீதை தனக்கு எற்பட்ட நிலை வேறுயாருக்கும் நடக்குக் கூடாது என்று அருள் பாலிக்கும் ஆலயம் தான் சீதா எலிய ஆலயம் என கூறப்படுகிறது. இக்கோயில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும் இயற்கை அம்சங்களுடன் அமைந்துள்ளது.
சீதாதேவி கடுங்காவல் வைக்கப்பட்டு இருந்த புண்ணிய பெரும்பதி. ராவணனின் கோட்டையில் இருக்க மறுத்த தேவி அசோகமரத்தின் கீழ் இங்கு எழுந்தருளியதாக கூறப்படுகின்றது. விஸ்வகர்மாவை கொண்டு அமைக்கப்பட்ட இப்பெரும் பூங்கா அனுமனின் முதல்வருகையாலும் பின் லங்காபுரியை எரித்த சம்பவத்தாலும் முற்றாக அழிவு உற்றது. எனினும் அனுமனும் சீதாதேவியும் முதலில் சந்தித்த இடம் அமர்ந்து இருந்த கல் அஞ்சனை மைந்தனின் பாத சுவடுகள் என்பன இன்றளவும் காணப்படுகின்றது. அசோக வனம் என்ற பெயருக்கு அமைவாக பெரும் அழிவை சந்தித்தும் இன்றும் எழில் கொஞ்சும் அழகுடன் கீர்த்தி மிக்க நீர் வளம் நிலவளம் என்பன கொண்டு திகழ்கிறது இந்த தேவ பூமி. பலவருடங்களுக்கு முன்பாக அக்கிராம மக்களின் பெரும் முயற்சியுடன் சீதா ராமரின் ஆலயம் அக்குன்றின் அருகில் அமைக்கப்பட்டது. தலவிருட்சம்-அசோக மரமாக திகழ்கிறது.
வானுயர்ந்த நீண்ட நெடும் மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு, நீரோடையின் சலசலக்கும் சத்தம், குளிர், காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் கருவறை தரிசனம் என யாவும் சேர்ந்து மனம் குளிர வைக்கிறது. வழக்கமாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று தரிசனம் கண்டிருப்போம். ஆனால் இது புதுமையாக இருந்தது. கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்லவைக்கிறது. கோயிலை தொடர்ந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் நீரோடை வரும். இந்த நீரோடை தான் இராவணனால் அசோக வனத்தில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதை தினமும் நீராடி சென்ற இடமாம். இராமன் சீதா கல்யாணம் காடேறல், பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல், பரதன் பாதரட்சை பெறுதல், புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல் மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அனுமன் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும். வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறவேண்டும்.