பதிவு செய்த நாள்
28
டிச
2018
11:12
தஞ்சாவூர்: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், அம்மன் சன்னதி கோபுர கும்ப கலசம், ஒரு வாரமாக சாய்ந்து காணப்படுவதால், பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கட்டப்பட்டு, 1,000 ஆண்டுகளைக் கடந்தும், தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது, தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அன்னியர்களின் படையெடுப்புகள் என, அனைத்தையும் தாங்கி, கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிறது. தஞ்சை பெரிய கோவிலில், பிரமாண்ட தனி சன்னதியில், பெரியநாயகி அம்மன் எழுந்தருளியுள்ளார். அம்மன் சன்னதியில் தான், கோவில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரிய நாயகி அம்மன் சன்னதியின் கோபுர கலசம், காற்று, மழையால் ஒருபுறமாக சாய்ந்துள்ளது. இதைக் கண்டு, சுற்றுலா பயணியர், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, சாய்ந்த நிலையில் உள்ள கலசத்தை சீர்செய்ய தொல்லியல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.