திண்டுக்கல்: பழநி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்கும் நடைபாதையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச விழா ஜன.,15லிருந்து 24ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநில பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்களும் திண்டுக்கல், மதுரை வந்து பாதயாத்திரையாக வருவர். இவர்களின் நலன் கருதி திண்டுக்கல் – பழநி வரை ரோட்டோரம் பேவர் பிளாக் கற்களால் 63 கி.மீ.,க்கு தனியாக நடைபாதை அமைக்கப்பட்டது.
தைப்பூச விழாவையொட்டி வெளிமாவட்டங்களில் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் உடைந்து, முட்புதர்கள் மண்டி கிடப்பதால் பாதத்தை பதம் பார்க்கிறது. காயம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க எந்த வசதியும் ஏற்படுத்தவில்லை. தைப்பூச விழாவுக்கு முன் நடைபாதையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். மேலும் பழநியில் கழிப்பறை, குடிநீர் மற்றும் தற்காலிக தங்கும் இடங்கள் ஏற்படுத்தவில்லை என பக்தர்கள் தெரிவித்தனர்.