பதிவு செய்த நாள்
01
ஜன
2019
11:01
திருப்புத்தூர்:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். குடவரை கோயில் சிறப்பு பெற்ற, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், காலை 4 மணிக்கு, நடை திறந்தது. காலை 8 மணிக்கு தங்க அங்கியில் காட்சி அளித்த மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சாமிக்கு தினப்படி பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவராக எழுந்தருளிய விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சபரிமலை, பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வருகையாலும், இங்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டன. கோயில் டிரஸ்டிகள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.