பதிவு செய்த நாள்
01
ஜன
2019
11:01
சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை டிச., 30 மாலை 5:00 மணிக்கு திறந்த பின் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. பாதுகாப்புக்காக 2280 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். டிச.,30ல் நடை திறந்த போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை நீண்டிருந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த போதும் இதே நிலை காணப்பட்டது. 3:15 மணிக்கு மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் தொடங்கியது. ஆரம்பித்து வைத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு, பின்னர் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடந்தது. மண்டல காலத்தை ஒப்பிடும் போது மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 18- படியேற காத்து நிற்கும் பெரிய நடைப்பந்தல் எப்போதும் நிரம்பி வழிகிறது. தரிசனத்துக்காக வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆறு பெண்களை நிலக்கல்லில் போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.
பாதுகாப்புக்காக எஸ்.பி., சுஜித்தாஸ் தலைமைமையில் 2280 போலீசார் சன்னிதானம் வந்துள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படையினர், கேரள போலீசின் கமாண்டோக்கள் பணியில் உள்ளனர். சபரிமலையில் பெண்கள் வருகை விஷயத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பெண்கள் வரவேண்டாம் என்று தனது அமைச்சரவையில் எந்த அமைச்சரும் சொல்ல முடியாது என பினராயி கூறியுள்ளார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, பெண்கள் வருவதை தவிர்க்கவேண்டும், என்று கூறியிருந்த அமைச்சர் சுரேந்திரன் தனது கருத்தை மாற்றியுள்ளார். அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. நான் தவறு செய்தால் கட்சி என்னை திருத்தும், என்று கூறியுள்ளார். பெண்கள் சபரிமலை வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், முதல்வர் சொல்வதுதான் சரி, பிரச்னை வேண்டாம் என்பதற்காக தான் பெண்கள் வரவேண்டாம் என்று கூறினேன், என்று தெரிவித்துள்ளார்.