பதிவு செய்த நாள்
01
ஜன
2019
12:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த திருப்படித் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். மேலும், நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடியவாறு, முருகப் பெருமானை வழிபட்டனர்.365 படிகள்திருத்தணி முருகன் கோவிலில், திருப்படித் திருவிழா நேற்று துவங்கியது.
விழாவையொட்டி, காலை, 9:30 மணிக்கு சரவணப் பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருத்தணி, எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன் ஆகியோர், பஜனை குழுவினரை வரவேற்று, படித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைக்கப்பட்டது. பஜனை கோஷ்டிபல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்கள் பாடியவாறு, மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர்.மேலும் பக்தர்கள், தங்களது நேர்த்திகடனை தீர்க்க, ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
பக்தி கச்சேரிகாலை, 11:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்படித் திருவிழாவை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மற்றும் மலைக்கோவிலில் திருப்புகழ் பஜனை, மண்டபத்தில் பல்வேறு குழுவினர்களால் பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர்.மேலும், வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா குழுவின், 101வது படித் திருவிழாவையொட்டி, நகரத்தார் மண்டபத்தில் அன்னதானம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தது.சிறப்பு பூஜைநள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். இன்று, புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு, வெள்ளி நாக வாகனத்தில் உற்சவ பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.