பதிவு செய்த நாள்
02
ஜன
2019
01:01
மேல்மருவத்தூர்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பங்காரு அடிகளார், பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 31ல்)அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார், உலக நன்மைக்காக, வேள்வி பூஜையை துவக்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நள்ளிரவு, 12:00 மணிக்கு, கருவறை அம்மனுக்கு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று (ஜன., 1ல்) அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, கர்நாடக மாநில ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், சித்தர் பீடத்தில் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பங்காரு அடிகளார் பங்கேற்று, மடிக்கணினி, தையல் இயந்திரம், ஆட்டோ உட்பட, பல நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு வழங்கினார்.இது தவிர, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி வழங்கினார்.பின், கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சித்த மருத்துவக் குறிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, கர்நாடக மாநில, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் செய்தனர்.