பதிவு செய்த நாள்
21
பிப்
2012
11:02
ராஜ்கோட்:குஜராத்தில், பாவ்நாத் சிவன் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.குஜராத்தின் ஜுனாகத் மாவட்டம் கிர்நார் மலையடிவாரத்தில், புகழ் பெற்ற பாவ்நாத் சிவன் கோவில் உள்ளது. சிவராத்திரியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இந்த கோவில் அருகே உள்ள பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலியாகினர்; 40க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, கூடுதல் தலைமைச் செயலர் தலைமையிலான உயர் மட்ட விசாரணைக்கு, மாநில முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒன்பது லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜுனாகத் நகரையும், பாவ் நகர் கோவிலையும் இணைக்கும் குறுகிய பாலத்தில் இரண்டு பஸ்கள் பழுதாகி நின்று விட்டதால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்று இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அகில பாரத சாது சமாஜத்தின் சார்பில் நேற்று ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. ஏழு பேர் பலியான சம்பவத்தால் இந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.