பதிவு செய்த நாள்
05
ஜன
2019
01:01
சபரிமலை: -இரண்டு பெண்கள் சபரிமலை வந்ததால், நடை அடைத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு 15 நாட்களில் விளக்கமளிக்க தேவசம்போர்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளது. இலங்கையை சேர்ந்த இளம் பெண் நேற்று தரிசனம் நடத்தியாக பரவிய தகவலால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பிந்து, கனகதுர்கா என இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய கேரள கம்யூ., முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்து தனது திட்டத்தை நிறைவேற்றினார். சீருடை அணியாத போலீசின் உதவியுடன் இந்த பெண்கள் தரிசனம் நடத்தினர். இதனால் நேற்று முன்தினம் வெடித்த போராட்டத்தால் கேரளா ஸ்தம்பித்தது.
குழப்பமான தகவல்: இந்நிலையில், இலங்கையை சேர்ந்த சசிகலா 47, நேற்று அதிகாலை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.தனது கணவருடன் வந்த அவர் தரிசனம் முடிந்து பம்பை திரும்பினார். அங்கு நிருபர்களை சந்தித்த அவர், 18-ம் படி வரை சென்றேன். அங்கு போலீசார் எனது அடையாள அட்டைகளை வாங்கி பரிசோதித்தனர். 47 வயது என்பதால் தரிசனத்துக்கு செல்ல வேண்டாம்என்று திருப்பி அனுப்பி விட்டனர். நானும் வற்புறுத்தவில்லை. எனது கணவரும், மகனும் தரிசனம் நடத்திய பின்னர் திரும்பி விட்டேன் என்றார். ஆனால் அரசு தரப்பில் சசிகலா தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இது பற்றி முதலில் மார்க்சிஸ்ட் டிவியிலும், பின்னர் மற்ற டிவிக்களிலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில் சசிகலா போல ஒருவர் தரிசனம் நடத்தி திரும்புவது தெரிந்தது. ஆனால் சசிகலா கொண்டு வந்த இருமுடி கட்டு நீல நிறத்தில் இருந்தது. டிவியில் தெரிந்தது வேறு நிறத்தில் இருந்தது. இதை சுட்டிக்காட்டி சசிகலா தரிசனம் நடத்தவில்லை என உளவுத்துறை முடிவு செய்தது.ஆனால் சசிகலா தரிசனம் செய்ததாக பரப்புவதில் அரசும்,அரசு ஆதரவு டிவியும் ஆர்வம் காட்டியது.
தந்திரிக்கு நோட்டீஸ்: எனினும் இது தொடர்பாக தந்திரி கண்டரரு ராஜீவரரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நடை அடைப்பது தொடர்பான எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. தொடர்ந்து பெண்கள் வருவதாக வதந்தி பரவுவதால்,பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் நடை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தியது தொடர்பாக தந்திரி கண்டரரு ராஜீவரருவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இதன் கூட்டத்தில் ஆணையர் வாசு, நடைபெற்ற சம்பவங்கள் பற்றி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தேவசம்போர்டின் அனுமதி பெறாமல் நடை அடைத்தது தவறு என்று கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைவர் பத்மகுமார், 15 நாட்களுக்குள் தந்திரி விளக்கமளிக்க கோரப்படும், என தெரிவித்தார்.