பதிவு செய்த நாள்
09
ஜன
2019
11:01
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவம் துவங்கியது.இதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து புறபட்டு, மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் ஆண்டாள் எழுந்தருளினர்.
அங்கு போர்வைபடிகளைந்து திருவடி விளக்கம், அரையர் பாலமுகுந்தனின் அரையர்சேவை நடந்தது. பின்னர் தீர்த்தம், சடாரி, கோஷ்டி முடிந்து மண்டபங்கள் எழுந்தருளி, ரதவீதி சுற்றி மதியம் ஒரு மணிக்கு திருமுக்குளம் எண்ணெய்காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு மாலை 4:00 மணிக்கு எண்ணெய்காப்பு உற்ஸவத்தை பாலாஜிபட்டர் நடத்தினார். 2 மணிநேரத்திற்கு மேலாக நடந்த இதன் வைபவங்கள் முடிந்ததும் திருமஞ்சனம் நடந்தது. உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் ஆண்டாளை தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள் மண்டபங்கள் எழுந்தருள ரதவீதிகள் வழியாக வடபத்ரசயனர் சன்னிதி வந்தடைந்தார். அங்கு மங்களாசாசனம் நடக்க மூலஸ்தானம் வந்தடைந்தார். அங்கு அர்த்தசாமபூஜை நடந்தது. தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் மற்றும் வெங்கடேஷ், மணியம் கோபி மற்றும் கோயில்பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். எண்ணெய்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு ஜன.14 வரை தினமும் காலையில் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், மதியம் எண்ணெய்காப்பு வைபவம், இரவு மூலஸ்தானம் வந்தடைதல் நடக்கிறது. ஜன.15 அன்று மணவாளமாமுனிகள் மங்களாசாசனம், ஜன.16 அன்று பெரியாழ்வார் சன்னிதியில் கனுவைபவம் நடக்கிறது.