பதிவு செய்த நாள்
09
ஜன
2019
12:01
உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு சாதனங்கள், கடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரபட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாலக் கோவிலில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சுற்று வட்டார கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள், வண்டிகளில் கால்நடைகளை பூட்டிவந்து, சிறப்பு தரிசனமும் மேற்கொள்கின்றனர்.அதன்படி, நடப்பாண்டில் வரும் 16 முதல், 18ம் தேதி வரை மூன்று நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. அதனை முன்னிட்டு கோவிலுக்கு வர்ணம் பூசப்பட்டு, பொலிவுடன் காட்சியளிக்கிறது.கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்க, 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவிழாவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பக்தர்களும் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.மக்களை மகிழ்விக்கும் வகையில் கடைகள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி சுத்தப்படுத்தப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.திருவிழாவையொட்டி, வளாகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை களைகட்டும். விழாவுக்கு வரும் குழந்தைகள் ராட்டினத்தில் சுற்றியும், வேண்டிய பொருட்கள் வாங்கியும் உற்சாகத்துடன் வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர்.
கோவில் நிர்வாகம் கவனத்திற்கு! திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அதிக வெயில் தாக்கத்தால் பக்தர்கள் மயக்கமடைகின்றனர். இதனால், பயணிகள் காத்திருக்கும் பகுதிகளில் தற்காலிக மேற்கூரை அமைத்தால் வசதியாக இருக்கும்.