பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
அசுரர்கள் தொல்லை தாளமுடியாத தேவர்கள், கயிலைநாதரான சிவனைச் சரணடைந்தனர். அவர்களின் குறை தீர்க்க முருகனை அவதரிக்கச் செய்தார் சிவன். அசுரர்களை அழிக்கும் விதமாக முருகனுக்கு அன்னை பார்வதி வேல் கொடுத்து ஆணையிட்டது ஒரு தைப்பூச நாளில் தான். அன்னை கொடுத்த வேலின் துணையுடன் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்த்தினார் முருகன். இதனடிப்படையில் சூரசம்ஹார விழா பழநியில் தைப்பூசத்தன்று நடக்கிறது.
வெற்றிவேல் தாங்கிய வேலவனை தைப்பூசத்தன்று தரிசித்தால், தீயசக்தி அணுகாமல் நம்மைக் காத்தருள்வான். பழநியில் பூசவிழா பத்துநாள் நடக்கும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர். திருமணம், தம்பதி ஒற்றுமை, குழந்தைப் பாக்கியம், வியாபார அபிவிருத்தி, நல்ல மகசூல் என பக்தர்கள் அவரவர் விருப்பங்களை முன்வைத்து முருகனுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். அலகு குத்துதல், காவடி சுமத்தல், முடிக்காணிக்கை என வழிபாடு மேற்கொள்வர்.
தைப்பூசம் தொடங்கும் முன் பல ஊர்களில் இருந்தும், விரதமிருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருவர். எல்லா முருகன் கோயில்களிலும் இந்த விழா நடக்கும். வெளிநாடுகளில் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பழநிக்கு அடுத்த நிலையில் தைப்பூசம் சிறப்பாக இருப்பது பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோயிலில் தான். பினாங்கு முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தன்று பல நாட்டிலுள்ள தமிழர்கள் கூடுகின்றனர். சீனர்களும் விழாவில் பங்கேற்பது சிறப்பு. காவடி, அலகு குத்துதல் என நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர். மலேசியாவில் பெரிய பண்டிகையாக தைப்பூசம் கொண்டாடப்படுவ தால் அரசு விடுமுறை அறிவிக்கிறது. பிரபலமான மலேசியா பத்துமலை முருகன் கோயில், கோலாலம்பூரில் இருந்து 12கி.மீ., தொலைவில் உள்ளது.
தைப்பூசத்தன்று கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் பாதயாத்திரை புறப்பட்டு பத்துமலை கோயிலுக்கு ஒன்பது மணி நேரத்தில் வருவர். சிங்கப்பூர் முருகன் கோயிலில் கருவறையிலுள்ள வேலுக்கு பிரதான இடம் அளிக்கப்படுகிறது. தைப்பூசத்தன்று வேலுக்கு பாலபிஷேகம் நடக்கும். இரவில் முருகன் வெள்ளித்தேரில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ’வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா’ என கோஷமிட்டபடி பக்தர்கள் தேரை இழுப்பர். ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், பெர்த், கான்பெர்ரா உள்ளிட்ட இடங்களில் முருகனுக்கு கோயில்கள் உள்ளன. இங்கும் விழா சிறப்பாக நடக்கும். சுவாமிக்கு அபிஷேகம், பால்குடம், தேரோட்டம் உள்ளிட்ட வைபவங்கள் ஆஸ்திரேலியாவையே அதிசயிக்க வைக்கும். அதன்பின் அன்னதானம் நடக்கும். சிவன், சக்தி இணைந்து ’சிருஷ்டி’ என்னும் உயிர்களைப் படைத்த நாளாக தைப்பூசம் கருதப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி என்னும் முனிவர்களுக்கு சிவனும் பார்வதியும் இணைந்து நடன தரிசனம் அளித்தது இந்நாளில் தான். எனவே சிவன் கோயில்களிலும் பூஜை நடக்கும். தைப்பூசத்தன்று திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை தரிசித்தால் தோஷம் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.