பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
அன்னூர்:குமரன்குன்று கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூத தேர்த்திருவிழா, கடந்த 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஜன., 21ல்) அதிகாலையில், வள்ளி தெய்வானை சமேதர கல்யாண சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்கினார்.மாலை 5:10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ், அறங்காவலர்கள் உள்பட பல ஆயிரம் பேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தேர் மீது பக்தர்கள் பழங்களை வீசி முருகனுக்கு அரோகரா என கோஷம் இட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இன்று இரவு பரிவேட்டையும், 23 ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.
* செஞ்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 14ம் தேதி துவங்கியது. நேற்று, (ஜன., 21ல்) மகர லக்னத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந் தருளினார். மாலை, 3:00 மணிக்கு ஸ்ரீவிநாயகர் திருத்தேர் மற்றும் மந்திரகிரி வேலாயுத சுவாமி திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.
* அதேபோல், பெரி யநாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு பகுதிகளில் தைப்பூச திருவிழாவையொட்டி, பக்தர்கள் காவடி எடுத்து பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். காவடியில் ரிப்பிளக்டர்!வெள்ளக்கிணறில் வசிக்கும் முருகபக்தர்கள் கூறுகையில், கோவை வடக்கு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநியை நோக்கி சாலையோரத்தில் நடந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் சாலை ஓரம் செல்லும் போது, வேகமாக வரும் வாகனங்கள் பக்தர்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இந்தாண்டு காவடிகளில் ரிப்பிளக்டர் எனும் ஒளி உமிளும் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளோம். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றனர்.