பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிப்., 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆனைமலையிலுள்ள, புகழ் பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், பிற மாநிலங்களில் இருந்தும்வந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா தை மாதம் அமாவாசையன்று கொடியேற்றப்பட்டு, விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு பிப்., 4ம் தேதி குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்., 17ம் தேதி மயான பூஜையும்; 18ம் தேதி சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.பிப்., 19ம் தேதி பூவளர்ப்பு நிகழ்ச்சியும்; 20ம் தேதி குண்டம் இறங்குதல், 21ம் தேதி கொடி இறக்குதல், மகாமுனி பூஜையும்; 22ம் தேதி மகா அபிஷேகமும் நடக்கிறது.கோவில் திருவிழா தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, விழாவுக்கான ஏற்பாடுகளில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து, சப் - கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.