பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
ப.வேலூர்: கபிலர்மலை, பாலசுப்ரமணியசாமி கோவிலில், தைப்பூச திருத்தேர் விழா விமரிசையாக நடந்தது. ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில், தைப்பூச திருத்தேர் திருவிழா, கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பல்லக்கு உற்சவம், சுவாமி திருவீதி உலா, திருக்கல்யாண உற்சவம், சுவாமி புறப்பாடு ஆகியவை நடந்தன.
சுற்றுவட்டார பகுதியிலுள்ள பக்தர்கள் காவடி, தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று (ஜன., 21ல்)அதிகாலை, 5:00 - 6:30 மணியளவில், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 5:00 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவிழாவில், சமூக விரோத மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், ப.வேலூர் டி.எஸ்.பி.,ராஜு தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கலைவாணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.