பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், தைப்பூச திருத்தேர் பெருவிழா கோலாகலமாக நடந்தது.
மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, திருத்தேர் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு விழா, கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அபிஷேகம், அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில் என, பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று (ஜன., 21ல்) காலை, சுவாமி திருத்தேரில் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். எம்.எல்.ஏ., நாமக்கல் பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், மோகனூர் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், பால், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்துக் கொண்டு, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, தேரோட்டம், தேர் வடம் பிடித்து இழுத்தல் நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.