பதிவு செய்த நாள்
24
ஜன
2019
02:01
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மழை வேண்டி விடிய விடிய நூதன விழா நடந்தது. ராசிபுரம் அடுத்த, கல்லாங்குளம் கிராமத்தில், தை பவுர்ணமி இரவு, மழை வேண்டி நிலா பிள்ளையார் வழிபாடு நடப்பது வழக்கம். இதை, கடந்த, 100 ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதி மக்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் (ஜன., 22ல்) இரவு துவங்கியது.
ஒரு சிறுமியை, நிலா பிள்ளையாராக பாவித்து, அவருக்கு நிலா போல வெண்ணிற ஆடை உடுத்தி, கோவில் முன் அமர வைத்து, அனைத்து பூஜைகளும் செய்தனர். தொடர்ந்து, உடுக்கை, பம்பை இசையுடன், சாமி பாடல்கள் பாடப்படுகின்றன. பின், பெண்கள் கும்மியடித்து சுற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்கு பிறகு, அருள் வரும் அந்த சிறுமி, மழை குறித்து ஆருடம் சொல்கிறார். தொடர்ந்து, ஊரை அந்த சிறுமி வலம் வருவதுடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவில், இப்பகுதி மக்கள் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.