பதிவு செய்த நாள்
31
ஜன
2019
11:01
சென்னை: தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம், பக்தி மார்க்கம், பாரம்பரிய விளையாட்டுகள் என சகலமும், அடிப்படை முதல் முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பாக, சென்னை, வேளச்சேரியில் நடத்தப்படும், 10வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி விளங்குகிறது. இக்கண்காட்சி, லட்சக்கணக்கான மக்களிடம், பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை, பண்பு, கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 2009ம் ஆண்டு முதல், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தி வருகின்றன.
கண்காட்சியின் சிறப்பு: இந்த ஆண்டு, 10வது ஆன்மிக சேவை கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கியது. கண்காட்சியின் முன்னோட்டமாக, மக்களை ஈர்க்கும் வகையில், ரத யாத்திரை, நீச்சல், யோகா, பாட்டு, நடனம், நடை பயணம், சைக்கிள் பேரணி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. கண்காட்சியின் துவக்க விழா, நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கண்காட்சியை துவக்கி வைத்து, அருளாசி வழங்கினார். நிகழ்வில், பல்வேறு மடாதிபதிகள் பங்கேற்றனர். இந்த ஆன்மிக கண்காட்சி, பிப்., 4ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த ஆறு நாட்களும், ஜீவராசிகளை பேணுதல்; பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல்; பெண்மையைப் போற்றுதல். சுற்றுச்சூழலை பராமரித்தல்; நாட்டுப்பற்றை வளர்த்தல்; வனம், வனவிலங்குளை பாதுகாத்தல் ஆகிய தலைப்புகளில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பத்தாவது ஆன்மிக சேவை கண்காட்சியில், இந்த ஆண்டு, 400 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல்வேறு ஆன்மிக துறைகளின் அரங்குகள், ஏராளமான மடங்கள், ஆன்மிக சேவை அமைப்புகளின் செயல்பாடுகளை விளக்கும் அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மூலிகை செடி வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், நாட்டு மாட்டு சாணம், கோமியத்தின் மகிமைகள், இயற்கை உணவுப் பொருட்கள், யோகா, தியானம் ஆகியவை குறித்து விளக்கும் அரங்குககளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக பாரம்பரிய விளையாட்டுகள், கிராமங்களின் சூழல், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விளக்கும் அரங்கங்களும், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஆந்திர கோவில்களில் இருந்து, தரிசனத்திற்காக சுவாமி ரதங்கள் வருகை தந்துள்ளன.
கலை நிகழ்ச்சிகள்: கண்காட்சி நடக்கும் ஆறு நாட்களும், தினமும் மாலை, தமிழக, மராட்டிய, பஞ்சாப், கர்நாடக, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களின், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, பிப்., 1ம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், பிப்., 3ம் தேதி மூவர்ணம், வேலு நாச்சியார் குறித்த வரலாற்று நாட்டிய நாடகம், பிப்., 4ம் தேதி, திருமலா - திருப்பதி தேவஸ்தானம் நடத்தும், ஸ்ரீனிவாசர் கல்யாணம் ஆகியவை நடக்கின்றன. கண்காட்சியின் முதல் நாளான நேற்று, பல்லாயிரக்கணகான பொதுமக்கள், குடும்பத்துடன் கண்டு களித்தனர். அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் நடத்தப்படும் இந்த கண்காட்சி, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹிந்து மதத்தின் அடிப்படை அன்பு: விஜயேந்திரர் பத்தாவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கியதாவது: இது போன்ற ஆன்மிக கண்காட்சிகள், அதிகளவில் நடத்தப்பட வேண்டும். ஹிந்து மதம், இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பரவியுள்ளது. அதை மகா பெரியவர் விளக்கியுள்ளார். இயற்கையை ஒட்டிய மதம், சமயமே ஹிந்து மதம். இது பஞ்ச பூதங்களை பாதுகாத்துள்ளது. ஹிந்து சமயத்தின் அடிப்படை அன்பு தான். இந்த சமயத்தின் வளர்ச்சி, 1,000 ஆண்டுகளில் தடுக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகிறது. ஹிந்து மக்களுக்கு, இந்த மதத்தை பற்றிய பிரசாரம், தற்போது தேவைப்படுகிறது. அதுதான் கடைசி முயற்சியும். ஹிந்து என்பது, தாழ்வு மனப்பான்மை வார்த்தை அல்ல, பெருமைப்படக்கூடிய வார்த்தை. ஒவ்வொரு குடும்பமும் ஒரு குலம் தான். கோவில்கள் பாராமரிக்கப்பட வேண்டும். ஹிந்து சமயம் காப்பாற்றப்பட்டால், உலகம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அருளாசி வழங்கினார்.