பதிவு செய்த நாள்
31
ஜன
2019
11:01
கிருஷ்ணகிரி: வந்தவாசியில் கடந்த, 7ல் புறப்பட்ட கோதண்டராமர் சிலை, நேற்று, கிருஷ்ணகிரி வந்தடைந்தது.
கர்நாடக மாநிலம், ஈஜிபுராவில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. முகம் மட்டும் வடிவமைத்து, கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட, கார்கோ லாரியில் சிலை புறப்பட்டது. கடந்த, 28ல் கோதண்டராமர் சிலை மத்தூர் வந்தது. அங்கிருந்த சென்டர் மீடியன் அகற்றப்பட்டு, 29ல் ஜெகதேவி தர்கா அருகே, லாரி நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை புறப்பட்ட லாரி, மதியம், 1:00 மணிக்கு, வேட்டியம்பட்டி வந்த போது, டயர்கள் வெடித்தன. அவற்றை மாற்றியபின், புறப்பட்ட லாரி, மதியம், 3:00 மணிக்கு, திருவண்ணாமலை மேம்பாலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மேம்பாலம் அருகே, தரைப்பாலம் அடியில், ராட்சத தடுப்புகளை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த பின், ஆவின் மேம்பாலம் வழியாக, பெங்களூரு சாலைக்கு சிலை செல்லும். இதனால், திருவண்ணாமலை சாலையில் சென்ற வாகனங்கள், சென்னை சாலையில் திருப்பி விடப்பட்டன. போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.