பதிவு செய்த நாள்
05
பிப்
2019
02:02
கரூர்: தை அமாவாசையை முன்னிட்டு, கரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை, ஆடி, மஹாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளில், ஆற்றங்கரைகளில், மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகம். இதன்படி, தை அமாவாசையை முன்னிட்டு, நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். கரூர், வாங்கல், வெள்ளியணை, பரமத்தி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், அதிகாலையில் இருந்தே நெரூரில் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, அவர்களது குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு, ஆற்றங்கரையில் புரோகிதர்கள் மூலம், தர்ப்பணம் கொடுத்தனர். அதன் பின் பிண்டங்களை ஆற்றில் கரைத்து, காவிரித் தாயை வழிபட்டனர். ஆற்றில் நடுவே, சிறிதளவு தண்ணீர் செல்வதால், அரை கி.மீ., தூரம் சென்று நீராடி, வழிபட வேண்டியிருந்ததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.