மாரியம்மன் தெப்பக்குளம் படித்துறைகளில் இரும்பு தடுப்பு வேலி அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2019 12:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் படித்துறைகளில் 16.80 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன.
மதுரை சுற்றுலா இடங்களில் தெப்பக்குளமும் ஒன்று. ஆண்டுதோறும் இங்கு தை தெப்பத்திருவிழா நடக்கும். சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்ட தெப்பத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்தாண்டு உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தண்ணீர் நிரப்பப்பட்டு விழா நடந்தது. இதற்காக தெப்பக்குளத்தைச் சுற்றி நிரந்தரமாக விளக்குகள் பொருத்தப்பட்டன. நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. கோடையில் தெப்பம் வறண்டு போக வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையில் கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு விடும். தவிர, இரவில் மைய மண்டபத்தில் சமூக விரோத செயல்களும் நடக்கக் கூடும் என்பதால் இரும்பு வேலி அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு திசையிலும் 3 படித்துறை வீதம் 4 திசைகளுக்கு 12 படித்துறைகள் உள்ளன. ஏற்கனவே தெற்கு திசையில் பரீட்சார்த்த முறையில் ஒரு படித்துறையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற படித்துறைகளிலும் இரும்பு வேலி அமைக்க கோயில் சார்பில் ரூ. 16.80 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.