பதிவு செய்த நாள்
09
பிப்
2019
03:02
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், கோவில் பிரச்னையை தீர்க்கக் கோரி, பொதுமக்கள் அமைதி போராட்டம் நடத்தினர். மல்லசமுத்திரத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமையான சோழீஸ்வரர், செல்லாண்டியம்மன், அழகுராய பெருமாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும், ஆனி மூல நட்சத்திரத்தன்று தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பிரிவினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நிர்வாக பிரச்னை இருந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, 2011ம் ஆண்டிற்கு பிறகு, இத்திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில், குறிப்பிட்ட பிரிவினர், இத்திருவிழாவை மாசி மாதத்தில் நடத்த முடிவு செய்து, பத்திரிகை அடித்துள்ளனர்.
இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல், ஆகமவிதிகளை மீறி திருவிழா நடத்துவதாகவும், ஏற்கனவே நடந்தது போல், ஆனிமாத மூலநட்சத்திரத்தன்றே, இந்து அறநிலைய துறையின் சிறப்பு அதிகாரியின் தலைமையில், அனைத்து பொதுமக்களும் கலந்கொள்ளும் வகையில், திருவிழா நடத்த வேண்டும் என, கோவில் முன், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அமைதி போராட்டத்தை நேற்று (பிப்., 9ல்) துவங்கினர். போராட்டம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.