பதிவு செய்த நாள்
09
பிப்
2019
03:02
காஞ்சிபுரம்: அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை, ஆட்சீஸ்வரர் கோவிலில் நாளை (பிப்., 10ல்) கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது.
தொண்டை நாட்டு திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது; சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்றது, இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில்.இக்கோவில் கும்பாபிஷேகம், 2001ல் நடைபெற்றது.
18 ஆண்டுகளுக்கு பின், நாளை (பிப்., 10ல்) காலை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, பிப்., 6 காலை, கிராம தேவதை வழிபாடு நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு, அச்சுமுறி விநாயகர் மற்றும் இளங்கிளி நாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் உமையாட்சீஸ்வரரிடம் அனுதி வேண்டல் நடந்தது. நேற்று (பிப்., 8ல்) காலை, சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இன்று (பிப்., 9ல்) காலை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாவது கால வேள்வியும், மாலை, மூன்றாவது கால யாக பூஜைகள், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேக தினமான நாளை பிப்., 10ல் காலை, 5:30 மணிக்கு, நான்காவது கால யாக பூஜை துவங்குகிறது. அதைத்தொடர்ந்து, யாத்ரா, தானம், மஹா தீபாரதனை நடைபெறுகிறது. காலை, 8:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நிகழ்கிறது.காலை, 8:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை, 10:00 மணிக்கு, ஆட்சீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், பெரும்பேர் கண்டிகை அகஸ்தியருக்கு திருமணகோலகாட்சி - கிரிவலம் நடைபெறுகிறது. விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஊரக தொழில் துறை அமைச்சர், பா.பெஞ்சமின் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.போக்குவரத்து மாற்றம் கும்பாபிஷேகத்தை யொட்டி, அச்சிறுப்பாக்கம் நகருக்குள் வரும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள், புறவழி சாலையாக மாற்றி விடப்படும். அங்குள்ள, தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணியர் பயணம் செய்யலாம்.