பதிவு செய்த நாள்
11
பிப்
2019
01:02
திருப்பூர்:திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவிலில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம் நேற்று நடந்தது.
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பயன்பெற வேண்டி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிபாடு நடந்தது. வரும், 17 மற்றும், 24ம் தேதிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்ரீவர் வழிபாடு நடக்க உள்ளது. நேற்று (பிப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு, பட்டாச்சார்யார்கள், ஹயக்ரீவர் வேள்வி பூஜை நடத்தினர்.
யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து, 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு, திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும், மாணவ, மாணவியர், பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, அதிக மதிப்பெண் பெற வேண்டுதல் நடத்தப்பட்டது. ஒவ்வொருவரின் பெயர் மற்றும் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கயிறு மற்றும் ஸ்ரீஹயக்கிரீவர் படத்துடன் கூடிய வழிபாட்டு அட்டை இலவசமாக வழங்கப்பட்டது.இந்த சிறப்பு வழிபாட்டில், 1,000க்கும் அதிகமான, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.