காஞ்சிப்பெரியவர், யாரையாவது திடீரென அழைத்து சில பணிகளை ஒப்படைப்பார். அவர்களும் அதை செய்து முடிப்பர். ஆனால் குறிப்பிட்டவரிடம் ஒப்படைத்தது ஏன் என்பது, அவர் மட்டுமே அறிந்த ரகசியம். ஒருமுறை சிதம்பரம் நடராஜரின் தூக்கிய திருவடிக்கு காஞ்சிப்பெரியவர் வைரக்கவசம் செய்ய விரும்பினார். அதற்கு நடராஜர் சிலையில் திருவடியை அளந்து அதற்கேற்ப கவசம் தயாரிக்க வேண்டுமே? அதற்கு சிதம்பரம் கோயிலிலுக்கு யாரை அனுப்பப் போகிறார் என்றொரு கேள்வி எழுந்தது. சுவாமிகளை அடிக்கடி தரிசிக்க வரும் மூதாட்டி ஒருவர் அன்று மடத்திற்கு வந்தார். “நீ சிதம்பரம் போய் நடராஜரின் தூக்கிய திருவடியை அளவெடுத்துக் கொண்டு வா”என்றார் காஞ்சிப்பெரியவர். பண்டிதர்கள் பலர் இருக்க தன்னை அனுப்புகிறாரே என மூதாட்டி தயங்கி,“சுவாமி...நானே தான் போகணுமா”என்றார்.
“நீ தான் போகணும்”என பளிச்சென தெரிவித்தார் காஞ்சிப்பெரியவர். மூதாட்டியும் புறப்பட்டார். சிதம்பரம் தீட்சிதர்களிடம் விபரத்தை தெரிவிக்க, அவர்கள் நடராஜர் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். வாழைநார் ஒன்றினால் தூக்கிய திருவடி அளவெடுக்கப்பட்டது. அந்த நாரைக் கண்ணில் ஒற்றிக் கொண்ட மூதாட்டி காஞ்சிபுரம் திரும்பினார். “சுவாமி! நீங்கள் சொன்னதைச் செய்ய பல ஆண்கள் தயாராக இருக்கும் போது என்னை ஏன் அனுப்பினீர்கள்?”என்றார். சிரித்த காஞ்சிப்பெரியவர்,“நடராஜரின் தூக்கிய திருவடியாக எந்தக் கால் இருக்கிறது?” “இடதுகால் தான். ’இடதுபதம் தூக்கி ஆடும் நடராஜன்’ என்று கீர்த்தனை கூட இருக்கிறதே?” “இடதுகால் யாருடையது?” இடப்பாகத்தில் அம்பாள் தானே இருக்கிறாள்? அப்படியானால் அது அம்பாளுடையது”. “பெண்ணின் பாதத்தை அளந்து பார்க்க ஆண்களை அனுப்பலாமோ? கூடாதல்லவா அதனால் உன்னை அனுப்பினேன்” தில்லை அம்பல நடராஜரை வெறும் சிலையாகப் பார்க்காமல் காஞ்சிப்பெரியவர், உணர்வுள்ள சிவனும், பார்வதியுமாக பார்க்கிறார். _திருப்பூர் கிருஷ்ணன்