குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் ’அன்பாயிரு, அன்பைத் தேடு’ என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்டார் ஒரு குழந்தையின் தந்தை.அதற்கு மருத்துவர், “எங்கள் மருத்துவமனையில் பல குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதற்கான காரணம் அறிய ஊழியர்களை கண்காணிக்கத் தொடங்கினேன். குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது, “ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் உயிரை எடுத்துடுவேன்,” என மிரட்டக் கண்டேன். குழந்தைகளும் அழுதபடியே மருந்தைக் குடித்து விட்டு, வாந்தி எடுத்தனர். அப்போது ஆயாக்களோ, “பிசாசே! ஏன் வாந்தி எடுத்து தொலைத்தே?” என அடிக்க கையை ஓங்கினர். மறுநாளே, ’குழந்தைகளை அன்புடன் கவனிக்க தாதிகள் தேவை’ என விளம்பரம் செய்து சேவை மனம் கொண்டவர்களை பணியில் அமர்த்தினேன். அவர்களின் ஆதரவால் மருத்துவமனைக்கு நற்பெயர் உண்டானது. எனவே அன்பின் அவசியத்தை வலியுறுத்தி இதை எழுதினேன்” என்றார். “உங்களது அன்பானது, அறிவிலும், எல்லா உணர்விலும், இன்னும் அதிகமாக பெருகக்கடவது” என்ற வசனத்தை கடைபிடித்தால் உலகம் நலம் பெறும்.