ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் மகாசிவராத்திரியன்று 87 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார்.
ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெரு பத்ரகாளியம்மனுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் கையால் சுடப்படும் அப்பம் படைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். சிவராத்திரியான நேற்றுமுன்தினம் இரவு 11:30 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சியை பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், துவக்கி வைத்தனர். விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட 87 வயது மூதாட்டி முத்தம்மாள் அப்பத்தை கையால் சுட்டு எடுத்தார்.
பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட்டு வணங்கினர். அதிகாலையில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அப்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேனி, மதுரை, விருதுநகர், சென்னை உட்பட பல்வேறு பகுதி பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.