சூலுார்: சூலுார் மேற்கு அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை ஒட்டி, குண்டம் விழா நடந்தது. சூலுார் பெரிய குளத்துக்கு அருகில் உள்ள மேற்கு அங்காளம்மன் கோவில் நுாறாண்டுகள் பழமையானது. இங்கு மகா சிவராத்திரியை ஒட்டி நடக்கும் குண்டம் பிரசித்தி பெற்றது. கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மாசி மக சிவராத்திரி பூஜை, இரண்டாம் பள்ளய பூஜையும், பூக்குண்டம் வளர்த்தலும் நடந்தது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு மூன்றாம் பள்ளய பூஜையும். நொய்யல் ஆற்றில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராட்டு நடந்தது. தொடர்ந்து நொய்யல் ஆற்றில் இருந்து அம்மை அழைத்தல், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் பூஜைகள் நடந்தன. காலை, 7:45 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டது. பூசாரி லோகநாதன் முதலில் குண்டம் இறங்கினார். பின் பக்தர்கள் பலர் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.