பதிவு செய்த நாள்
07
மார்
2019
12:03
திருவள்ளூர்: மாசி அமாவாசையை முன்னிட்டு, வீரராகவர் கோவிலில், நேற்று நடந்த தெப்ப உற்சவத்தில், உற்சவர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் மும்முறை வலம் வந்தார். அமாவாசை நாயகராக விளங்கும் வீரராகவர், மாசி மாதத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று, மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை முதல், மதியம் 12:00 மணி வரை; மதியம், 1:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெற்றது.கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர், வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
தெப்ப உற்சவம்: மாசி மூன்று நாள் தெப்ப உற்சவம், நேற்று மாலை துவங்கியது. முதல் நாள் தெப்பத்தில், ஹிருதாப நாசினி குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாலை, 6:30 மணிக்கு எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். பின், நான்கு வீதிகளில் புறப்பாடு வந்து, உற்சவர், கோவிலுக்கு திரும்பினார்.