பதிவு செய்த நாள்
07
மார்
2019
01:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சி
மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று வெள்ளித்தேரோட்டம் துவங்கியது;
தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன்
கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன்
துவங்கியது.
தொடர்ந்து, கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு
பூஜைகளும் நடக்கிறது. கடந்த மாதம், 19ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி
நடந்தது. இதனையடுத்து, பக்தர்கள் தினமும் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி
வழிபாடு செய்து வருகின்றனர்.தொடர்ந்து, கடந்த, 1ம் தேதி பக்தர்கள் பூவோடு
எடுத்து வந்து வழிபாடு துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில்
இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து, அம்மனை வழிபட்டனர். நேற்று காலை, 6:00
மணிக்கு மாவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று மாலை, 21 அடி உயர
வெள்ளித்தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும்
எழுந்தருளினர்.இரவு, 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அம்மா தாயே;
காவல் தெய்வமே, என, பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். புஷ்ப
அலங்காரத்தில், நீல நிற பட்டு உடுத்தி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில்
அருள்பாலித்தார்.கோவில் வளாகத்தில் துவங்கிய தேரோட்டம், மார்க்கெட் ரோடு
வழியாக வந்து, வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்டது.இன்று, இரண்டாம் நாள்
தேரோட்டத்தில், சத்திரம் வீதியில் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை மூன்றாம்
நாள் தேரோட்டத்தில் கோவில் வளாத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.தேரோட்டத்தை
முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு,
போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.