பதிவு செய்த நாள்
02
மார்
2012
11:03
புதுடில்லி : மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, 1,536 அறைகள் மற்றும் 193 கூடங்கள் அடங்கிய ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில், சீரடி நகரில், மகான் சாய்பாபாவின் சமாதி உள்ளது. இந்த ஆலயத்தை தரிசிப்பதற்காக ஒவ்வொரு நாளும், 30 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள், தங்கிச் செல்ல விரும்புகின்றனர். இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையும், சென்னையில் உள்ள சீரடி சாய் அறக்கட்டளையும் இணைந்து, 25 ஏக்கர் பரப்பளவில் பல அடுக்கு கொண்ட ஆசிரமத்தை கட்டியுள்ளன. இந்த ஆசிரமத்தில், 15 ஆயிரம் பேர் தங்கக்கூடிய அளவில், 1,536 அறைகளும், 193 பெரிய கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இந்த ஆசிரம கட்டடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.