பதிவு செய்த நாள்
21
மார்
2019
12:03
தேனி: பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி –பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் பங்குனி உத்திரத்தேர்திருவிழா மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் , நேற்று மாலை நடந்தது. தேரில் சோமஸ்கந்தர் , சிறிய தேரில் விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், பிரியாவிடை அம்மன் வலம் வந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா, தேனி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், கைலாசநாதர் கோயில் ஆலோசகர் ஜெயபிரதீப், டாக்டர் முத்துகுகன் , ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை ஆலோசகர் சரவணன், திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், பி.சி.சிதம்பர சூரியவேலு, நாகராஜன் பங்கேற்றனர்.
போடி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன், வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானையுடன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அலங்காரத்தினை விக்னேஸ்வர குருக்கள் செய்தார்.