பதிவு செய்த நாள்
02
ஏப்
2019
11:04
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் கோவில் வாளகத்தில் ஸ்ரீசந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி, இன்று காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் மேளதாளம் முழுங்க, ஓதுவார்கள் திருமறைமந்திரம் ஓத கொடியேற்றம் நடந்தது. பின்னர், கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதணை காண்பிக்கப்பட்டன. இன்று மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறபாடும், தொடர்ந்து, நாளை முதல் 14ம் தேதி வரை விழா நாட்களில் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. 14ம் தேதி மாலை ஓலைச்சப்பரம் விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து, திருவிழாவின் 15ம் நாளான 16ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு முத்துமணி அலங்கார சப்பரத்தில் தியாகராஜர், கமலாம்பாள் உடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டுடன், சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. தேரோட்டம் 4 ராஜவீதிகளில் சென்று தேர் மண்டபத்தை வந்தடைக்கிறது. வருகிற 19ம் தேதி மாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.