பதிவு செய்த நாள்
03
ஏப்
2019
11:04
காஞ்சிபுரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, காஞ்சிபுரம் வரதராஜ பெரு மாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் நடைபெற உள்ளதாக, கோவில் வட்டாரம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 100 கால் மண்டபத்தின் வடக்கே உள்ள அனந்த சரஸ் எனப்படும், தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில், நீராழி மண்டபத்திற்கு தென் திசையில், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபம் உள்ளது.இந்த மண்டபத்தில், நீரில் மூழ்கியபடி, கருங்கற்களால் ஆன பாறைக்குள் மிகப்பெரிய அத்திமரத்தால் ஆன, பழைய அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை, 40 ஆண்டு களுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்காகவும், பூஜைக்காகவும், வழிபாடு நடத்தப்படுகிறது.இதில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். கடைசியாக, 1979ல், ஜூலை, 2ல், குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு, ஆக., 18ம் தேதி வரை விசேஷ வைபவம் நடந்தது.தற்போது, 40 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 1ல், குளத்தில் இருந்து, அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளதாக, கோவில் வட்டாரம் தெரிவிக்கிறது.வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண, உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் எனப்படும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங் களில், 2019, ஜூலை, 15ல், அத்திவரதர், தெப்பக்குளத்தில் இருந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறவுள்ளதாக, கடந்த ஒரு ஆண்டாக வதந்தி பரவியது. அதற்கு மாறாக, ஜூலை, 1ல் வைபவம் நடைபெற உள்ளது.