பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
ஆழ்வார்குறிச்சி :ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் நேற்று மகா நவசண்டி ஹோமத்தில் துர்கா பூஜை நடந்தது. ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் ராமநதியின் வடகரையில் சுப்பிரமணியர், அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சப்தரிஷிகளின் சாபத்திற்கு அஞ்சிய அக்னி பகவான் தன்னுடைய சாப நிவர்த்திக்காக ராமநதியின் வடகரையில் ஓர் தீர்த்தம் அமைத்து மீன் உருவம் கொண்டு நீண்ட நாட்களாக அங்கேயே ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்து தவம் செய்து வந்தார். அக்னி பகவானின் தவத்தையும், வலிமையையும் உணர்ந்து ஈசன் மீண்டும் ஒளியை அளித்து சக்தியை வழங்கிய இடம் தான் அக்னிதீர்த்தக்கரை ஆகும். பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத இந்த அக்னி தீர்த்தக்கரையை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் டிரஸ்ட் மற்றும் உழவார பணியினர் சீரமைத்து பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாட்டில் நன்மைகள் நடைபெற வேண்டியும் 9 நாட்கள் மகா நவசண்டி ஹோமம் தொடங்கியுள்ளது. தினமும் நான்கு மணிக்கு அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், பிரசுத்த ஹோமம், நவசண்டி ஹோமம், ஒவ்வொரு நாளும் சரஸ்வதி, மகாலட்சுமி, பத்ரகாளி, ராஜராஜேஷ்வரி, திரிபுரசுந்தரி, துர்க்கை, உமாமகேஸ்வரி, வனதுர்கா பூஜைகள், 9ம் நாள் சுமங்கலி பூஜை ஆகியன நடக்கிறது. திருவனந்தபுரம் திருவளந்தூர் மணிகண்டசர்மா தலைமையில் மகா ஹோமங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறாம் நாளான நேற்று துர்கா பூஜை நடந்தது. இன்று (5ம் தேதி) உமா மகேஸ்வரி பூஜையும், நாளை (6ம் தேதி) வனதுர்கா பூஜையும், நிறைவு நாளான 9ம் நாள் மகா நவசண்டி ஹோமம், ஸ்ரீகுமாரி பூஜை, சுமங்கலி பூஜை, யோகி பூஜை ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் டிரஸ்ட் மற்றும் அம்பா யாகம், மகா நவசண்டி ஹோமம் டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.