பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
தூத்துக்குடி :அங்கமங்கலத்தில் உள்ள அன்னபூரணி சமேத நரசிம்மாசாஸ்தா கோவிலில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம் நடந்தது. திருச்செந்தூர் அருகேயுள்ள அங்கமங்கலத்தில் நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன் மானிட ரூபத்தில் வீற்றிருக்கும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் உள்ளது. தமிழ்நாட்டில் நரசிம்மர் தங்கை அன்னபூரணியுடன் சாந்தமாக வீற்றிருக்கும் ஆலயம் இது மட்டும் தான். இங்கு பவுர்ணமி திருவிளக்கு பூஜை, நரசிம்ம ஜெயந்தி, நவராத்திரி அன்று 1008 இலுப்பை தீபம் ஏற்றுதல் போன்ற பல விழாக்கள் நடைபெற்று வருகிறது. அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் நேற்று அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக வித்யா கணபதி, சரஸ்வதி, மூகாம்பிகை, ஹயக்கிரீவர் மூலமந்திர ஹோமம் நடந்தது. ஹோமத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் தாணு செய்திருந்தார். மயிலாடுதுறை கிரிசர்மா சிறப்பு ஹோமத்தை நடத்தினார். விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற நீதிபதி செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு யாக நிகழ்ச்சியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாகர்கோவில் இந்து வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். விழாவில் சேதுராமலிங்கம், சிங்கராஜ், அனவரதன், சுவாமிநாதன் மற்றும் உபயதாரர்கள் ராஜசேகரன், சந்தனராஜ், நாராயணன், அன்னமணி, பத்திரகாளிமுத்து, வக்கீல் குமாஸ்தா சகாயம், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.