தெலுங்கு புத்தாண்டான யுகாதி இன்று பிறந்தது. திருப்பதியில் கோயில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்குவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் வழிபாடு நடக்கும். கோயில் முழுவதும் மலரால் அலங்கரித்து, ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடத்துவர். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். அதன்பின் ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலன் கூறுவர். ராமாயண சொற்பொழிவும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும்.
அரக்கனான ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான். அவளை தன் வசப்படுத்த எத்தனையோ வழிகளில் முயற்சித்தான். அவள் சம்மதிக்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல் விழித்த நேரத்தில் சிலர், “சீதைக்கு ராமனைப் பிடிக்கிறது என்றால், நீயும் ராமன் மாதிரியே உன் உருவத்தை மாற்றிச் செல்ல வேண்டியது தானே! உன் எண்ணம் நிறைவேறுமே” என்றனர். அப்போது ராவணன் சொன்னான். “உங்களுக்கு தோன்றும் யோசனை எனக்கும் தோன்றியிருக்காதா என்ன! ஒருநாள் ராமனாக என்னை மாற்றியதும் நல்லவனாகி விட்டேன். தப்பு செய்ய மனம் வரவில்லை. அது மட்டுமல்ல! அந்த வேஷத்தில் சென்றால் சீதையை வணங்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ராமன் நல்லவனாக இருக்கிறான்!” என்றான். வேஷமிட்டால் கூட ராமர் நல்லெண்ணத்தை கொடுப்பார் என்பதைச் சொல்லும் கதை இது. நல்லவர் வணங்கும் தெய்வமான ராமரை வணங்கி புத்தாண்டை வரவேற்போம்.