பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண திருவிழா நேற்று (ஏப்., 9ல்) முதல் துவங்கியது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வர ருக்கு, ஏப்.,19ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.திருவிழா துவங்கியதையொட்டி, நேற்று மாலை, பல்வேறு வகையான பூக்களுடன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை, 7:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா நோன்பு சாட்டப்பட்டது. அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வரும் 17ம் தேதி மாரியம்மன் கோவிலில் திருமஞ்சனம் மற்றும் காலை, 9:00 மணிக்கு முளைப்பாலிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று மாலையில், காமாட்சி அம்மனுக்கு, லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் குங்கும அர்ச்சனை நடக்கிறது.
மறுநாள், (18ம் தேதி), மாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.திருக்கல்யாண உற்சவம், 19ம் தேதி காலை, 9:30 மணி முதல் துவங்குகிறது. அன்று, மதியம், 12:00 மணிக்கு திருமாங்கல்ய தாரணம் மற்றும் 12:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.மாலையில், வானவேடிக்கையுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 20ம் தேதி காமாட்சி அம்மனுக்கு, காலை, 10:00 மணிக்கு மகாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவையொட்டி, 17ம் தேதி முதல், பக்தி இன்னிசை , ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.