பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
02:04
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையம் ஊர் மக்கள், குதிரைகளை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர்.கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, இன்று (ஏப்., 10 ல்) கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
இதையொட்டி, சின்ன கருணைபாளையம் மற்றும் ராயம்பாளையம் கிராமத்தினர் அலங்கரிக்கப்பட்ட மண் குதிரையை ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு நடத்துவர்.கடந்த வாரம், சின்ன கருணைபாளையம் கிராமத்தினர் பங்கேற்ற குதிரை ஊர்வலம் நடந்தது.
தொடர்ச்சியாக, நேற்று (ஏப்., 9ல்), ராயம்பாளையம் கிராமத்தினர், நான்கு மண் குதிரைகளை உருவாக்கினர். மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து, சுமந்தபடி, ஏறத்தாழ, நான்கு கி.மீ., கொளுத்தும் வெயிலிலும், ஆகாசராயர் கோவிலுக்கு சென்றனர். வழி நெடுகிலும் பொதுமக்கள், பக்தர்களுக்கு தண்ணீர், நீர் மோர் வழங்கியும், மாலைகள் கொடுத்தும் வரவேற்றனர். வெயில் சுட்டெரித்த நிலையில், லாரி மூலம் தண்ணீரை ரோட்டில் ஊற்றியபடியும், சிறுவர்கள், அந்த நீரில் உடல் முழுக்க நனைந்தபடியும், ஊர்வலத்தில் பங்கேற்றனர்.